கொங்கு நாடு என்ற ஒரு மாவட்டமே இல்லாத நிலையில், மத்திய அரசு இப்படி குறிப்பிட்டுள்ளது ஏன்..?
கொங்கு நாடு என்ற ஒரு மாவட்டமே இல்லாத நிலையில், மத்திய அரசு இப்படி குறிப்பிட்டுள்ளது ஏன்..?;
கடந்த 2019ம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு தற்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதியவர்களுக்கு வழி விட்டு 12 மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், 43 பேர் புதிய அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அதில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், புதிதாக பதவியேற்ற 43 அமைச்சர்கள் பற்றிய செய்தி குறிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதில், மத்திய அமைச்சராக பதவியேற்ற பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பற்றிய குறிப்பில், ‘15 ஆண்டுகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர் தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவராக 2017 முதல் 2020 வரை இருந்தவர். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம் மற்றும் பிஹெச்.டி பட்டம் பெற்றவர்.‘கொங்குநாடு, தமிழ்நாடு. ஆண் - வயது 44’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “ஒவ்வொரு அமைச்சருக்கும் அவரது கல்வி, தகுதி, வயது, எந்த மாவட்டம், மாநிலம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எல்.முருகன் பெயருக்கு பின்னால் நாமக்கல் மாவட்டம் என்பதற்கு பதில் ‘கொங்கு நாடு, தமிழ்நாடு’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கொங்கு நாடு என்ற ஒரு மாவட்டமே இல்லாத நிலையில், மத்திய அரசு இப்படி குறிப்பிட்டுள்ளது ஏன்..? இது, மேற்கு மாவட்டங்களை தனியாகப் பிரிப்பதுபோல் உள்ளது” என, நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒன்றிய அரசு என்று திமுகவினர் கூறி வரும் நிலையில், ஒன்றிய அரசு என்று சொல்லக்கூடாது, மத்திய அரசு என்றுதான் சொல்ல வேண்டும்; தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது, தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும். திமுகவினர் பிரிவினையை ஏற்படுத்தவே இவ்வாறு பேசுவதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.
ஆனால் தற்போது, பாஜக தலைமையிலான மத்திய அரசு பிரிவினையை ஏற்படுத்துவதுபோல ‘கொங்குநாடு’ என்று குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. பாஜகவினர் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்தே அது தவறுதலாக நடந்ததா அல்லது ஒன்றிய அரசுக்கு பதிலடியாக அச்சிடப்பட்டதா என்பது தெரியவரும்.