கேரளாவில் திருவள்ளுவர் ஞானமடம் எனும் வாழ்வியல் நெறி அமைப்பை நிறுவிய சிவானந்தர் காலமானார்.
 
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்துக்கு உட்பட்ட பிரவம் என்ற ஊரில், 1946ஆம் ஆண்டு பிறந்தார் சிவானந்தர். கொச்சான் – பொலியாள் தம்பதியின் 12ஆவது மகனாவார் சிவானந்தர். இவர் சிறு வயதில் இருந்தே திருக்குறள் மீது ஈடுபாட்டுடன் இருந்து திருக்குறள் வாழ்வியல் நெறிகளை மக்களிடம் எடுத்துக் கூறுவதையே தனது முழுநேர பணியாக செய்து வந்தார்.

இவரது துணைவியார் சரஸ்வதி அம்மையாரும் திருக்குறள் சிந்தனைகளை மக்களிடம் பரப்புவதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பின்னர் இருவரும் இணைந்து ஆதி திருவள்ளுர்வர் ஞானமடம் எனும் பெயரில் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மடத்தின் கிளைகளை தொடங்கி மக்களை திருக்குறள் நெறிகளால் ஒருங்கிணைத்தனர். 
உலகம் போற்றும் தமிழராக கொண்டாடப்படும் திருவள்ளுவரை, திருக்குறளை கேரளாவில் உள்ள மலையாள மொழி பேசும் மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவராய் திகழ்கிறார் சிவானந்தர். 

இந்த நிலையில் சிவானந்தர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் எர்ணாகுளம் அமிர்தானந்தமயி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in
 

Tags: