நம்ம படம் உண்மையாவே ரிலீஸ் ஆகுதுங்க - எஸ்.ஜே. சூர்யா ட்விட்!!
நம்ம படம் உண்மையாவே ரிலீஸ் ஆகுதுங்க - எஸ்.ஜே. சூர்யா ட்விட்!!
நெஞ்சம் மறப்பதில்லை பட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு விலக்கப்பட்டுள்ளதாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு துவங்கப்பட்டு 2016-ம் ஆண்டில் முடிக்கப்பட்ட படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, சுவேதா நந்திதா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரெய்லர் உள்ளிட்ட போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. ஆனால் கடன் பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு தாமதமாகி வந்தது.
கடந்த 4 ஆண்டுகளாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகததால், ரசிகர்கள் இந்த படத்தை மறந்தேவிட்டனர். இந்நிலையில் பணப் பிரச்னைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாகவும், இந்த படம் வரும் மார்ச் -5ம் தேதி திரைக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பட்ககுழுவினர் உற்சாகம் தெரிவித்தனர். ரசிகர்களுக்கும் இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். நெஞ்சம் மறப்பதில்லை படத்தை தயாரித்துள்ள ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ ரூ. 1.24 கோடி கடன் பாக்கி தரவேண்டியுள்ளது, அதனால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ரேடியன்ஸ் மீடியா என்கிற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதற்கு நீதிமன்றமும் தடை விதித்தது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளிவருமா என்கிற சிக்கல் எழுந்தது.
தற்போது இருதரப்புக்கும் இடையே இருந்து வந்த பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. இன்று நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் விலக்கியுள்ளது. இதனால் படம் நாளை திட்டமிட்டபடி வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் எஸ்.ஜே. சூர்யா, “படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி, அவர்கள் செய்த பிரார்த்தனைக்கும் நன்றி. நம்ம படம் உண்மையாகவே ரிலீஸ் ஆகுதுங்க” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். இதனால் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த செல்வராகவன் ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.
Issue Between Radiance Media and Escape Artists is Sorted , just got cleared by the court THX A LOT TO ALL THE FANS WHO HAVE BEEN PRAYING AND WAITING FOR THIS RELEASE #NenjamMarapathillai NAMMA PADAM UNMAYAVE RELEASE AHUDHUNGA 😍🙏@selvaraghavan @thisisysr @Madan2791 @Arvindkrsna
— S J Suryah (@iam_SJSuryah) March 4, 2021