இதுவரை 6 தனி விமானங்களில் 550 பேர் வெளியேற்றியுள்ளோம் - ஒன்றிய அரசு

இதுவரை 6 தனி விமானங்களில் 550 பேர் வெளியேற்றியுள்ளோம் - ஒன்றிய அரசு

Update: 2021-08-27 22:53 GMT

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டு மக்களே வேறு நாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்து வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மீட்புப் பணிகள் குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அதிகாரி கூறியது,

“காபூல் அல்லது துஷன்பேவிலிருந்து 6 தனி விமானங்களில் 550 பேர் வெளியேற்றியுள்ளோம். இதில் 260-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். மேலும், இந்திய நிறுவனங்கள் மூலமும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்கா, தஜிகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம். ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்தியாவிற்கு திரும்ப நினைத்த பெரும்பாலானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நாடு திரும்ப விரும்பும் சிலர் ஆப்கானிஸ்தானில் இருக்க வாய்ப்புள்ளது. மீட்புப் பணிகளின் போது சில ஆப்கானிஸ்தான் நாட்டினரையும் மீட்டுள்ளோம். அதில், பெரும்பாலானவர்கள் இந்து மற்றும் சீக்கிய மதத்தவர்கள் ஆவர்.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை என்பது நிச்சயமற்றது. முதலில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். காபூலில் அரசாங்கம் அமைப்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. நாங்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் நிலைமையை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News