அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா.. இந்திய ரசிகர்கள் அதிருப்தி
அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா.. இந்திய ரசிகர்கள் அதிருப்தி
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது. இதனால் ஒருநாள் போட்டித் தொடர் மீது இந்திய ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பார்ல் நகரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இதனையடுத்து இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி பார்ல் நகரில் உள்ள மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலாவதாக களமிறங்கிய கேப்டன் கே.எல். ராகுல் 4 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். அவர் 55 (79) ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். தவான் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். முதல் போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி இந்த போட்டியில் டக் அவுட்டானார்.
தொடர்ந்து களமிறங்கிய ரிஷாப் பண்ட் அதிரடியாக ஆடி10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என மொத்தம் 85 (71 பந்துகள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 11 ரன்கள், வெங்கடேஷ் அய்யர் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. அஸ்வின் 25 ரன்கள் மற்றும் ஷர்துல் தாக்குர் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான குயிண்டன் டி காக், ஜனிமேன் மலன் இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். குறிப்பாக டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டி காக் 78 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். ஜனிமேன் மலன் 91 ரன்களில் வெளியேறினார். இந்திய பவுலர்கள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை விரைவில் வெளியேற்ற தவறினர். ஆட்டத்தை சிறப்பாக தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இறுதி வரை பதற்றமில்லாமல் விளையாடி வெற்றியை தனதாக்கியது.
மார்க்ரம், வான்டெர் டுசன் ஆகியோர் கடைசி வளை கடத்தில் இருந்து சிறப்பாக விளையாடினர். முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 48.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
newstm.in