ஸ்டாலினா? எடப்பாடியா? பரபரப்பான சூழலில் 11 மணிக்கு ரிசல்ட்! வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

ஸ்டாலினா? எடப்பாடியா? பரபரப்பான சூழலில் 11 மணிக்கு ரிசல்ட்! வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Update: 2021-05-02 07:29 GMT

 

தமிழகத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்க இருக்கிறது.

ஒரு மாத காத்திருப்புக்கு பிறகு இன்று அந்த மிக முக்கிய நாள் வந்திருக்கிறது. தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற கேள்விக்கான விடையும் இன்று தெரிந்துவிடும். இந்நிலையில் தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கைக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 75 மையங்கள், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஒரு மையம் என 76 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணியில் 16 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

கொரோனா பரவலுக்கு இடையே வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், வழக்கத்தை விட முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது. ஏனென்றால் வாக்கு எண்ணிக்கை மேஜைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதனால் முழுவதும் முடிவுகள் வெளியாக இரவு 12 மணியாகும் என்று கூறப்படுகிறது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வேட்பாளர்கள், வேட்பாளரின் தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் தொடர்புடைய பணியாளர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அவர்கள் 48 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழோ அல்லது இருமுறை தடுப்பூசியோ போட்டிருக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனையின்போது, 98.6 பாரன்ஹீட்க்கு அதிகமாக இருந்தால், அந்த நபர் அனுமதிக்கப்பட மாட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணும் மையங்களில் மருத்துவக் குழு ஒன்றும் தயாராக இருக்கும். தொற்று பரவல் தடுப்பை கருத்தில்கொண்டு வெற்றி கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது.

Tags:    

Similar News