அடுத்தடுத்து பண்டிகைகள்.. விமான டிக்கெட் விலையும் உயர்வு !
அடுத்தடுத்து பண்டிகைகள்.. விமான டிக்கெட் விலையும் உயர்வு !
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து துாத்துக்குடி உட்பட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம், பல மடங்கு உயர்ந்துள்ளதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து மக்கள் பண்டிகையை கொண்டாட தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக, சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள், பண்டிகைக்கு முதல் நாள் விமான பயணம் மேற்கொள்வர். சென்னையில் இருந்து துாத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம் செல்வதற்காக, அதிக பயணியர் விமானங்களில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு, தினமும் நான்கு, மதுரைக்கு ஆறு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்கள் அனைத்திலும் பெரும்பாலான இருக்கைகளுக்கு முன்பதிவு முடிந்து விட்டது. பண்டிகைக்கு முதல் நாள் என்பதால், இந்த விமானங்களில் காலியாக உள்ள சில இருக்கைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் 3,500 ரூபாய் கட்டணம். தற்போது, 12 ஆயிரம் ரூபாய் வரையும்; மதுரைக்கு 3,500 ரூபாயாக இருந்த பயணக் கட்டணம், இப்போது 10 ஆயிரம் ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டு விட்டதாக வேதனையும் கூறுகின்றனர். அதேநேரத்தில், குறைந்த கட்டண டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்து, உயர்வான கட்டண டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளதாக விமான நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in