T20 World Cup: இங்கிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியா.. இந்தியா அபார வெற்றி !!
T20 World Cup: இங்கிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியா.. இந்தியா அபார வெற்றி !!
உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் டி20 போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஓமன் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்ற 8 அணிகளும் தற்போது பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றன. இந்திய அணி முதல் பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
அதே உற்சாகத்துடன் இன்று ஆஸ்திரேலியா அணியுடனான இராண்டாவது பயிற்சி போட்டியில் இந்தியா களமிறங்கியது. துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்றையப் போட்டியில் விராட் கோலி, முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் விளையாடவில்லை. ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கினார்கள். டேவிட் வார்னர் அஸ்வின் பந்தில் அவுட்டாகி வெளியாக அடுத்த பந்திலேயே மிட்சல் மார்ஸ் அஸ்வின் சுழலில் சிக்கினார். கேப்டன் ஆரோன் பின்ச் விக்கெட்டை ரவிந்திர ஜடேஜா வீழ்த்தினார். ஆஸ்திரேலியா 11 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
அடுத்துவந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி பொறுமையாக விளையாடியது. கிளன் மேக்ஸ்வேல் 28 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ராகுல் சஹர் பந்துவீச்சில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 41 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். ஸ்டீவன் ஸ்மித் 57 ரன்கள் எடுத்திருந்த போது கடைசி ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி இறுதியாக 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது.
53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றால் இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர் இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்ட இந்த ஜோடி அரைசதம் கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணி 68 ரன்கள் எடுத்திருந்த போது கே.எல்.ராகுல் 39 ரன்னில் அவுட்டானார்.
தனது வழக்கமான அதிரடியை தொடர்ந்த ரோஹித் சர்மா அரைசதம் கடந்தார். 3-வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் சிறப்பாக விளையாடி வந்தார். 41 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி 60 ரன்கள் எடுத்திருந்த போது ரோஹித் சர்மா ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். இறுதியாக இந்திய அணி 17.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. சூர்யகுமார் யாதவ் 38 மற்றும் ஹர்திக் பாண்டியா 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதையடுத்து 2 பயிற்சி ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இதனால் உலகக்கோப்பை தொடரில் இந்தியா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
newstm.in