மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி..?: முக்கிய முடிவு எடுக்கவுள்ளது தமிழக அரசு..!
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி..?: முக்கிய முடிவு எடுக்கவுள்ளது தமிழக அரசு..!
கடந்த 1989-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில், வேலையில்லாமல் இருந்த 13,000 பேருக்கு மக்கள் நலப் பணியாளர்களாக 2-7-1990 அன்று பணி நியமனம் வழங்கப்பட்டது. அதன்பின் 1991-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தபோது, இந்த 13,000 மக்கள் நலப் பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதன்பிறகு, 1996-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது, அந்த 13,000 மக்கள் நலப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர், 2001-ம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தபோது மறுபடியும் மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டது. அதன்பிறகு, 2011-ம் ஆண்டில் 13,500 மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதற்கிடையில், கொரோனா பேரிடர் காலத்தில் தங்களுக்கும் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கும், இந்த வழக்கின் மூல வழக்கு மற்றும் பிற வழக்குகளும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று பட்டியலிடப்பட்டு இருந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், ‘பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்க உள்ளது.
அதற்கான ஆலோசனைகளின் விவரங்கள் இன்னும் வழக்கறிஞர்களுக்கு தெரிவிக்கப்படாததால் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழக அரசின் இந்த தகவலால், மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கும் மீண்டும் பணி வழங்கப்படவுள்ளதா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.