ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிறப்பான பந்துவீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன், ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் அவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்று அங்கும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் புகழ் மேலும் உயர்ந்தது. தமிழகமே அவருக்கு வாழ்த்து கூறியது. இந்த சூழலில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கா விளையாடி வருகிறார். அவர் முதல் 2 போட்டிகளில் மட்டும் விளையாடிய நிலையில், அதன்பிறகு சன்ரைசர்ஸ் விளையாடிய ஆட்டங்களில் அவர் இடம்பெறவில்லை. அவரின் முழங்காலில் காயம் காரணமாகத் தான் ஆடவில்லை என அணி நிர்வாகம் கூறியது.இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் நடராஜன். 

 நடராஜனின் காயத்தை ஆய்வு செய்த பிசிசிஐ மருத்துவக் குழுவினர், அவருக்கு முழங்காலில் சிறிய அறுவைச் சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். அதன்படி இன்று அவருக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடராஜன், “இன்று எனக்கு முழங்கால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. என்னைக் கனிவுடன் கவனித்துக் கொண்ட மருத்துவக் குழுவினர், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள்,அனைவருக்கும் நன்றி. பிசிசிஐ அமைப்புக்கும், நான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


newstm.in

Tags: