பிரம்பு முறியும் அளவிற்கு அடித்த ஆசிரியர்.. கருவிழி கிழிந்து மாணவிக்கு கண் பார்வை பறிபோன அதிர்ச்சி..

பிரம்பு முறியும் அளவிற்கு அடித்த ஆசிரியர்.. கருவிழி கிழிந்து மாணவிக்கு கண் பார்வை பறிபோன அதிர்ச்சி..

Update: 2020-02-14 13:45 GMT

ஆசிரியர் தாக்கியதில் 5ஆம் வகுப்பு மாணவியின் கருவிழி கிழிந்து கண்பார்வை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளியில் ஆதிநாராயணன் என்ற ஆசிரியர், 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். தனது வகுப்பில் பல மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு வராததால் அனைவரையும் பிரம்பு மூலம் தாக்கியுள்ளார். இதில், முத்தரசி என்ற 5ஆம் வகுப்பு மாணவியை அடிக்கும் போது பிரம்பு உடைந்து அவரது கண்களில் குத்தியது. இதனால் வலியால் துடித்த முத்தரசியை ஆசிரியர்கள், பெற்றோருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அந்த மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் கருவிழி கிழிந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கண் பார்வை திரும்புவது தொடர்பாக இப்போது கூற முடியாது எனவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அங்கு மாணவிக்கு அரசு சிகிச்சை செய்ய பெற்றோர் அனுமதி அளித்த நிலையில், முத்தரசிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கண்ணிலிருந்த பிசிறு நீக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ஆதிநாராயணனின் இந்த செயலால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். 

newstm.in

Tags:    

Similar News