கொரோனா மாதாவுக்கு கோயில் அமைத்தவர் கைது..!

கொரோனா மாதாவுக்கு கோயில் அமைத்தவர் கைது..!

Update: 2021-06-12 16:05 GMT

உத்தர பிரதேசத்தில் கொரோனா மாதாவுக்கு கோயில் அமைத்தவர் மூடநம்பிக்கையை பரப்ப முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ளது ஜுஹி ஷுகுல்பூர் கிராமம். இங்கு, கொரோனா தொற்றால் மூன்று பேர் பலியாகினர். மேலும் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மிகவும் அஞ்சிய அக்கிராம மக்கள், கொரோனாவை கடவுளாகக் கும்பிட்டால் குணம் பெறலாம் என நம்பினர்.

இதையடுத்து, நான்கு தினங்களுக்கு முன்னர் கொரோனா மாதா எனும் பெயரில் ஒரு சிறிய சிலையை வடித்தனர். அதை, கிராமத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தடியில் வைத்து கும்பிடத் துவங்கினர். இதைப் பற்றி கேள்விப்பட்டதும், அக்கம் பக்கம் உள்ள கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து வணங்கத் துவங்கினர். 

பெண் தெய்வமாக அமைத்த அந்த சிலைக்கும் கொரோனோ பாதுகாப்பிற்காக முக கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. இதை வணங்க வருபவர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. அத்துடன், கொரோனா மாதாவை வணங்குவதால் அதன் தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் எனவும் நம்பினர்.

அதேசமயம், இந்தக் கோயிலின் மூலம் பொதுமக்களிடையே மூடநம்பிக்கைகள் வளர்வதாகவும் புகார் கிளம்பியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம், கொரோனா மாதா கோயிலை அகற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, நேற்று இரவு கிராமத்திற்கு வந்த போலீஸார் அந்தக் கோயிலை இடித்து சிலையை கைப்பற்றினர். அத்துடன், சிலையுடன் கோயிலை அமைத்ததாக ஜுஹி ஷுகுல்பூர்வாசி ஒருவரையும் கைது செய்தனர்.

அவர் மீது, சட்டவிரோதமாகக் கோயில் கட்டியதாகவும், பொதுமக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்த்ததாகவும் வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த நடவடிக்கையால், இதே போன்ற கோயிலை அமைக்க திட்டமிடப்பட்ட அருகிலுள்ள கிராமவாசிகள் அதை நிறுத்தி வைத்துள்ளனர்.
Tags:    

Similar News