வெப் சீரிஸ் பார்க்க இன்று முழு நாள் லீவு கொடுத்த நிறுவனம்..!
வெப் சீரிஸ் பார்க்க இன்று முழு நாள் லீவு கொடுத்த நிறுவனம்..!
வங்கிக் கொள்ளையை கதைக்களமாகக் கொண்ட உலக அளவில் மிகவும் பிரபலமான வெப் சீரிஸ் தொடர் 'மணி ஹெய்ஸ்ட்'. இதற்கு முன்னதாக 4 சீசன்கள் வெளியாகி, சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த வெப் சீரிஸின் 5வது பாகத்தின் முதல் 5 எபிசோட்கள் இன்று (செப். 3ம் தேதி) நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. இதற்கு பலர் காத்திருக்கின்றனர். இதற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ‘வெர்வ் லாஜிக்’ என்ற நிறுவனம் செப்டம்பர் 3ம் தேதி அதாவது இன்று விடுமுறை அறிவித்துள்ளது.
அந்த விடுமுறைக்கு, ‘நெட்ஃப்ளிக்ஸ் அண்ட் சில் ஹாலிடே’ என பெயரிட்டுள்ளனர். வெப் சீரிஸ் பார்க்க ஊழியர்கள் மொத்தமாக லீவு எடுப்பது, சொல்லாமல் லீவு எடுப்பது ஆகியவற்றை தவிர்க்க மொத்தமாக விடுமுறையை அறிவித்தார் அந்நிறுவனத்தின் சிஇஓ அபிஷேக் ஜெயின்.
இதை அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள், விடுமுறையை எந்த நேரம் எப்படி கழிக்க வேண்டும் எனவும் ஒரு பதிவை செய்துள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.