தமிழகத்தில் விடிய விடிய முஸ்லீம்கள் போராட்டம்!!!
தமிழகத்தில் விடிய விடிய போராட்டம்..! யாரும் இறக்கவில்லை என காவல்துறை விளக்கம்..!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் நேற்று போராட்டம் நடத்தினர். நீண்ட நேரம் போராட்டம் நீடித்ததால், கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
அதேபோல் திருவல்லிக்கேணி, பாரிமுனை, கிண்டி, ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சென்னையின் பல இடங்களிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆங்காங்கே கடுமையானபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதனால் மதுரை, திருச்சி, ராமநாதபுரம், தேனி என தமிழகத்தின் பல இடங்களில் இரவில் போராட்டம் பரவியது. இந்நிலையில் போராட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து ட்வீட் செய்துள்ள சென்னை காவல்துறை, 70 வயது மதிக்கத்தக்க பெரியவர் இயற்கையாக மரணம் அடைந்ததை, வண்ணாரப்பேட்டை CAA போராட்டத்தின்போது இறந்துவிட்டதாக சிலர் தவறுதலாக வேண்டுமென்றே பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். யாரும் இறக்கவில்லை. எச்சரிக்கை தேவை. இறந்துவிட்டார் என்ற பொய்த் தகவலை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in