திருமணமான 2 மாதத்தில் காதலனை கரம்பிடித்த இளம்பெண்..!
திருமணமான 2 மாதத்தில் காதலனை கரம்பிடித்த இளம்பெண்..!
பீகாரில், கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டப் பெண், திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு கணவனைப் பிரிந்து தனது காதலனை கரம் பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம் சுல்தான்காஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அனு குமாரி. இளம்பெண்ணான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆஷூ குமார் என்பவரை கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்களின் காதல் அனு குமாரியின் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால் அவர்கள், அனுகுமாரியின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், அனுகுமாரிக்கு வேறு இடத்தில் மணமகன் தேடியுள்ளனர்.
அனுகுமாரியோ, ஆஷூ குமாரைத்தான் திருமணம் செய்வேன் என ஒற்றைக் காலில் நின்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், அனுகுமாரியை வீட்டிற்குள் அடைத்துவைத்து சித்திரவதை செய்துள்ளனர். பின்னர், கிரான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்துவைத்தனர். வேறு வழியின்றி, அறிமுகம் இல்லாத அவருடன் 2 மாதங்களை கடத்தி வந்துள்ளார் அனுகுமாரி.
இந்நிலையில், தனது காதலனின் நினைவுகளால் கணவனுடன் வாழ விருப்பமில்லை என்பதை குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டு, ஆஷூ குமாரைச் சந்திக்க சென்றார் அனுகுமாரி. இதையடுத்து, அனுகுமாரியும் ஆஷூ குமாரும் சுல்தான்காஞ்ச் ரயில்நிலையத்திலிருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் ஏறியுள்ளனர். பின்னர், ரயிலிலேயே திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும், பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் எதிர்ப்பை தாண்டி பெண் ஒருவர் தான் விரும்பிய காதலனை கரம் பிடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.