தமிழ் திரையுலகை தம் நகைச்சுவையால் கட்டிப்போட்டவர் நடிகர் விவேக். இவர் தமது நகைச்சுவையில் ஆழமான கருத்துக்களை வைத்து ரசிகர்களை ரசிக்க வைப்பதில் வல்லவர். திரைத்துறையில் இவருடைய படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இவருடைய நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றன.
தமிழில் அனைத்து முன்னணி கதாநாயகன்களுடனும் நடித்துள்ள இவரை, பஞ்சு படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்தார் கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை. அதன் பிறகு சொல்லி அடிப்பேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் இன்னும் வெளியாக வில்லை. அதன் பிறகு நடித்த ’நான்தான் பாலா’, ’பாலக்காட்டு மாதவன்’ போன்ற படங்கள் வெளியாகி இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வந்தார். சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு, ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அப்துல்கலாம் கனவுத் திட்டத்தினை செயல்படுத்தி வந்தார்.
சினிமா ரசிகர்கள் இவரை ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் கொண்டாடி வந்தது. திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது.‘உன்னருகே நானிருந்தால்’, ‘ரன்’, ‘பார்த்திபன் கனவு’, ‘சிவாஜி’ போன்ற திரைப் படங்களுக்காக தமிழ் நாடு அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப் படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் படங்கள் இல்லாத போது மேல்மாடி காலி என்கிற சின்னத்திரை நாடகத்திலும் நடித்துள்ளார். இவரது மனைவி பெயர் அருள்செல்வி. இவருக்கு அம்ரிதாநந்தினி, தேஜஸ்வினி என்கிற இரு மகள்களும், பிரசன்ன குமார் என்கிற ஒரு மகன் இருந்தார். இதில் பிரசன்ன குமார் சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in