இல்லாத கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. பேஸ்புக் மோகத்தால் விபரீதம் !
இல்லாத கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. பேஸ்புக் மோகத்தால் விபரீதம் !
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் விஷ்ணு (30) - ரேஷ்மா (26) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 5ஆம் தேதி விஷ்ணுவின் வீட்டிற்கு அருகே ரப்பர் தோட்டத்தில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர்.
பின்னர் குழந்தையை திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பியபின்னர், இதய நோய் காரணமாகசிகிச்சை பலனின்றி இறந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரேஷ்மா மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து ரேஷ்மா உள்பட சிலரிடம் டிஎன்ஏ பரிசோதனையை நீதிமன்றம் அனுமதியுடன் நடத்தினர். கடந்த ஜூன் 22ஆம் தேதி டிஎன்ஏ பரிசோதனை முடிவு கிடைத்தது.
அதில் குழந்தையின் பெற்றோர் விஷ்ணு, ரேஷ்மா ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரேஷ்மாவை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர், பேஸ்புக் மூலம் அருண் என்ற ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்தது. ஆனால் ரேஷ்மா கள்ளக்காதலனை நேரில் பார்த்தது இல்லை, பேஸ்புக் மூலமே பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. 2வது குழந்தை இருந்தால் அவர் ஏற்று கொள்ள முடியாது என்று கூறியதால் குழந்தையை கொல்ல தீர்மானித்ததாகவும், குழந்தை பிறந்த ரப்பர் தோட்டத்தில் வீசியதாகவும் கூறினார்.
இதையடுத்து ரேஷ்மாவின் பேஸ்புக் காதலன் யார்? என்று போலீசார் விசாரித்தனர். விஷ்ணுவின் அண்ணன் மனைவி ஆர்யாவின் சிம்கார்டில் இருந்து தான் பேஸ்புக்கை பயன்படுத்தி வந்துள்ளார் ரேஷ்மா என தெரியவந்தது. இதையடுத்து ஆர்யாவை கடந்த 10 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜராக போலீசார் கூறினர். ஆனால் ஆர்யாவும், விஷ்ணுவின் சகோதரி மகள் கிரிஷ்மாவும் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். கிரீஷ்மாவின் செல்போனை பரிசோதித்தபோது அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு அமல் என்பவருடன் பேசியது தெரியவந்தது.
இதையடுத்து அமலை கண்டுபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. கிரீஷ்மாவும், ஆர்யாவும் சேர்ந்து விளையாட்டுக்காக ரேஷ்மாவை ஏமாற்றுவதற்காக அருண் என்ற பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி ரேஷ்மாவிடம் சாட்டிங் செய்ய தொடங்கி உள்ளனர். உண்மையில் அருண் என்று யாரும் கிடையாது. ஆனால் ரேஷ்மா அதை நம்பி விட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிரிஷ்மாவும், ஆர்யாவும் சேர்ந்து ரேஷ்மாவை அருண் என்ற பெயரில் ஏமாற்றி சாட்டிங் செய்து வந்துள்ளனர். விளையாட்டாக தொடங்கியது, குழந்தையை கொல்லும் அளவுக்கு விபரீதமானது. அப்புறம் தான் தெரிந்தது கள்ளக்காதல் இல்லை, உறவினர்களே போலி கணக்கில் சாட்டிங் செய்தது.
பிறந்த குழந்தையை ரேஷ்மா வீசி கொன்றது 2 பேருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் விசாரித்தால், இருவரும் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்துள்ளனர். இந்த விவரங்களை கிரிஷ்மா அமலிடம் கூறியுள்ளார். போலீசார் கைது செய்வார்கள் என்று அஞ்சிதான் கிரீஷ்மாவும், ஆர்யாவும் தற்கொலை செய்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.
newstm.in