பீதியில் உலக நாடுகள்.. ஒரே வாரத்தில் 2 கோடி பேருக்கு கொரோனா !
பீதியில் உலக நாடுகள்.. ஒரே வாரத்தில் 2 கோடி பேருக்கு கொரோனா !
உலகளவில் ஒரே வாரத்தில் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகளுக்கு பரவி 3ஆவது அலை, 4ஆவது அலையாக உருவெடுத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதன் கோர முகத்தை பல்வேறு வடிவங்களில் காட்டி வருகிறது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, கடந்த வாரத்துக்கான கொரோனா வைரஸ் பரவல் நிலை தொடர்பான வாராந்திர அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. உலகளவில் ஒரே வாரத்தில் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஜனவரி 17 முதல் 23 வரையிலான ஒரு வார காலத்தில் உலகளவில் புதிதாக வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் 42 லட்சத்து 15 ஆயிரத்து 852 பேரும் (24 சதவீதம் உயர்வு), பிரான்சில் 24 லட்சத்து 43 ஆயிரத்து 821 பேரும் (21 சதவீதம் அதிகரிப்பு), இந்தியாவில் 21 லட்சத்து 15 ஆயிரத்து 100 பேரும் (33 சதவீதம் உயர்வு), இத்தாலியில் 12 லட்சத்து 31 ஆயிரத்து 741 பேரும் (கடந்த வாரஅளவேதான்), பிரேசிலில் 8 லட்சத்து 24 ஆயிரத்து 579 பேரும் (73 சதவீதம் உயர்வு) ஒரு வாரத்தில் வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இதனிடையே, உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,28,59,116 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,44,733 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,67,30,028 ஆகவும் உள்ளது.
இதில், அமெரிக்காவில் புதிதாக 5,26,061 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,757 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதுவே பிரிட்டனில் தினசரி தொற்று பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. பிரிட்டனில் 1,61,49,319 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கு கீழ் பதிவாகி உள்ளது. இதுவரை 4,03,69,585 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in