ஸ்மார்ட்போன்களின் விலை குறைகிறது - ஒன்றிய அரசு தகவல்..!!

ஸ்மார்ட்போன்களின் விலை குறைகிறது - ஒன்றிய அரசு தகவல்..!!

Update: 2021-12-15 06:00 GMT

ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ‘தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை’ சார்பில் ‘இந்திய தொழில் கூட்டமைப்பின் கூட்டணி உச்சிமாநாடு 2021’ தலைநகர் புதுடெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் தொடக்கவிழாவில் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.

விழாவில் ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,

“உலகளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 4-5 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி மூலம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது. இது மிக மிக முக்கியமான விலை ஆகும். ஏனெனில் இது குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கும் மலிவு விலையில் உள்ளது.

ஸ்மார்ட்போன்களின் விலையை மேலும் குறைப்பதற்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.கடைசி மைல்வரை ஸ்மார்ட்போன் சென்றடையும் வகையில் வினியோக சங்கிலி செலவுகளை குறைத்தல் மற்றும் இந்தியாவின் வடிவமைப்பு திறன்களை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உதிரிபாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக் சிப்புகள் உற்பத்தியை அதிகரிக்க, இதுபோன்ற மேலும் பல முயற்சிகள் அரசாங்கத்தால் வரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வருவாயை அதிகரிப்பதற்கும் ஏழைகளுக்கு சேவைகளை அதிகரிப்பதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என்று  கூறினார்.

Tags:    

Similar News