காலையில் கொள்ளையன்.. மாலையில் பாதுகாவலன்.. சிக்கிய பலே திருடன் !!
காலையில் கொள்ளையன்.. மாலையில் பாதுகாவலன்.. சிக்கிய பலே திருடன் !!
பகுதி நேரத்தில் அரசு பள்ளி பாதுகாவலராகவும் பகுதி நேரம் கொள்ளையனாகவும் சுற்றிவந்த நபர் இரண்டு மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு சிக்கினார்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன் நகரை சேர்ந்த மூதாட்டி முத்தாலு (60). இவர் தனது வீட்டின் வெளியே பேத்திக்கு உணவு கொடுத்து கொண்டிருந்த போது பைக்கில் வந்த ஒருவர் விலாசம் கேட்பது போல் நடித்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் தங்க செயினை பறித்து சென்றார். அதேநேரத்தில் வில்லியனூர் பகுதியில் விலாசம் கேட்பது போல் நடித்து ஆசிரியை ஒருவரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது.
இது குறித்த புகார்களில் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு விட்டு தப்பி செல்லும் மர்ம நபர் கீழே விழுந்து தப்பி செல்வதும் அவரை ஆசிரியை மடக்கி பிடிக்க முயன்றதும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. மேலும் அதேநபர் தான் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து இரண்டு காவல் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை இரண்டு மாதங்களாக தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மூலகுளம் பகுதியில் ரெட்டியார்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் வந்தவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
சந்தேகத்தின் பேரில் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் தான் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டது உறுதியானது. விசாரணையில் அவர் புதுச்சேரி திலாசுப்பேட்டை பகுதியை சேர்ந்த அசோக் (43) என்பதும், லிங்கரெட்டி பாளையத்தில் உள்ள அரசு சார்பு பள்ளியில் வாட்ச்மேனாகவும், பகுதி நேரமாக இறைச்சி கடையும் நடத்தி வருவதும் தெரியவந்தது.
புதுச்சேரி, தமிழக பகுதிகளில் பல இடங்களில் கை வரிசை காட்டியுள்ளார். ஒவ்வொரு முறையும் ஒரு போலி பதிவு எண் கொண்ட பைக்கை பயன்படுத்தி காவல்துறையினரிடம் இருந்து தப்பிவந்துள்ளார். மேலும் மனைவி மற்றும் இரு குழந்தைகள் பெயரில் வைப்பு நிதிகளை சேர்த்துள்ளார். இதனைதொடர்ந்து தனது கறிக்கடையில் இறைச்சி குப்பை பகுதியில் மூட்டையாக கட்டி மறைத்துவைத்திருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிளான 23 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
newstm.in