ஒன்றிய அரசு என்பது அம்பேத்கரை அவமதிக்கும் செயல்..! - எல்.முருகன்
ஒன்றிய அரசு என்பது அம்பேத்கரை அவமதிக்கும் செயல்..! - எல்.முருகன்
சட்டப்பேரவையில் இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், “மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்..?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கத்தில், “திமுகவின் 1957ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இந்திய யூனியன் என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என்பதற்குப் பொருள். மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற அரசமைப்பு சட்டத்தின் முதல் வரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு என்ற சொல்லை கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் பயன்படுத்துகிறோம்.
ஒன்றிய அரசு எனக் கூறுவதைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அதை சமூகக் குற்றமாகப் பார்க்கக் கூடாது. அதனால்தான் நாங்கள் ஒன்றிய அரசு என்று சொல்கிறோம். இனி எப்போதும் அப்படித்தான் சொல்லுவோம்” என்று பதிலளித்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “ஒன்றிய அரசு என்று அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கு உள்ளது..? சட்டத்தில் இல்லாத வார்த்தையைப் பயன்படுத்துவது அம்பேத்கரை அவமதிக்கும் செயல். ஒன்றிய அரசு என்று சொல்வதற்கு நாங்கள் ஏன் பதற வேண்டும்..? மத்திய அரசை ஒன்றிய அரசு என இல்லாத சொல்லைப் பயன்படுத்துவது தவறான ஒன்றாகும். தமிழ்நாடு என்ன ஊராட்சி அரசா..? ஸ்டாலின் என்ன ஊராட்சி முதல்வரா.?” என்று கேள்வி எழுப்பினார்.