வரிசையாய் 4 கடைகளில் திருட்டு!! திருவள்ளூரில் தொடரும் சோகம்!!
திருட்டு ஆட்டோவில் வந்து ஒரே வரிசையில் உள்ள 4 கடைகளில் ஆட்டையை போட்ட திருட்டு கும்பல்..
திருவள்ளூர் பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த மண்வாளநகர் பகுதியில் உள்ள முக்கிய சாலையில் பல்வேறு கடைகள் உள்ளன. நேற்று நள்ளிரவில் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் முதலில் டயர் பஞ்ச்சர் போடும் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால் அந்த கடையில் பணம் ஏதும் இல்லாததால் அங்கிருந்து இரும்பு ராடு உள்ளிட்ட பொருட்களை எடுத்துள்ளனர்.
எடுத்த இரும்பு ராடுகளை கொண்டு அருகிலுள்ள செருப்புக் கடையின் பூட்டை உடைத்து கடையில் வைத்திருந்த ரூ.17,500 மற்றும் விலை உயர்ந்த செருப்புக்களை கொள்ளையடித்து சென்றனர். பின்னர், செருப்புக்கடையை அடுத்த பேன்சி ஸ்டோர் கடையின் வெளிபுற பூட்டை உடைத்த அவர்கள், ஷட்டரின் பூட்டை உடைக்க முடியாததால் அருகில் இருந்த மளிகை கடைக்கு சென்றனர்.
ஆனால் மளிகை கடையின் பூட்டையும் உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்துவந்த மணவாளநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் பெரியகுப்பம் பகுதியிலிருந்து ஆட்டோவை திருடிக்கொண்டு அங்கு வந்த மர்ம நபர்களே இந்தகொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் முக்கிய சாலையல் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூரில் தொடர்ந்து இப்படி திருட்டு நடைபெறுவதாகவும், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதியில் இருந்த வியாபாரிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
newstm.in