கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்துள்ளார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கியது.

இதையடுத்து சமூக வலைத்தளத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் ஹேஷ்டேக் டிரெண்டாகி பரபரப்பானது.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு ஆதரவாக இயக்குநர் பேரரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலு, “ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா இப்படி பல உச்ச நடிகர்கள் அவர்களின் மார்கெட்டுக்கு ஏற்றவாறு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு கோடிக்கணக்கில் வரி கட்டுகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

அந்த வரிப்பணம் எத்தனை திட்டங்களுக்கு உதவி இருக்கும். அந்த திட்டங்களால் எத்தனை மக்கள் பலனடைந்திருப்பார்கள்.

வரிக்காக இன்று விஜய் அவர்களை விமர்சிப்பவர்களும் அவர்களின் வரிப்பணத்தில் பலனடைந்திருக்கக்கூடும்.

இதுவரை விஜய் அவர்கள் கட்டிய வரிப்பணம் எத்தனை கோடி என்று அரசை அறிவிக்கச் சொல்லுங்கள்.

ஒரு பொருளின் விலையைவிட இரண்டு மடங்கு வரி விதிக்கும் போது யாருக்குத்தான் நெருடல் வராது.

அது சட்டத்துக்கு உட்பட்டு இருக்கலாம். இறக்குமதி வரியை மட்டுமாவது ரத்து செய்யலாமே என்று அவர் நீதி மன்றத்தை அணுகியது என்ன தேசக் குற்றமா?

அரசு சொல்லும் வரி அனைத்தையும் கட்டித்தான் தீரவேண்டும் என்றால் அப்ப ஜிஎஸ்டி எதிராக இங்கு பலர் பொங்குவது ஏன்?

விஜய் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதும், ரத்து செய்வதும் சட்டத்துக்குட்பட்டு நீதிபதி சொல்ல வேண்டிய தீர்ப்பு. சொல்லியும் விட்டார்.

அதைவிட பெரிய வேதனை இங்கே ஆளாளுக்கு நீதிபதிகளாய் ஏளனமாக விமர்சனம் செய்வது.

திரைப்படத்தில் ஹீரோ கெட்டவர்களை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுவார்.

நிஜத்திலும் அதே கதாநாயகன் கெட்டவர்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினால் நீதி மன்றம் சும்மா விடுமா?

விஜய் அவர்கள் வரி ஏய்ப்பு செய்யவில்லை. வரி கூடுதலாக இருக்கிறதே என்று நீதிமன்றம் அணுகி இருக்கிறார்.

ஆளாளுக்கு கூச்சல் போடும் அளவுக்கு அவர் மீதொன்றும் தவறில்லை என்று நினைக்கிறேன்.

Tags: