மக்களவையை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்போம் என அனைத்துக் கட்சிகளும் உறுதி அளித்துள்ளது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று (31ம் தேதி) தொடங்கியது. இன்று காலை 11 மணிக்கு, காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில், இந்த கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், மக்களவையின் அனைத்துக் கட்சி தலைவர்கள் இடம் பெற்றுள்ள அலுவல் ஆய்வு கமிட்டியை  அவர் கூட்டினார். அப்போது, பட்ஜெட் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓம் பிர்லா, “மக்களவையை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்போம் என அனைத்துக் கட்சிகளும் உறுதியளித்துள்ளன. அத்துடன், இந்த கூட்டத் தொடருக்கான மக்களவை நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் மற்றும் குடிமக்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்த விவாதங்கள் ஆக்கபூர்வமான வகையில் இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

Tags: