அந்நிய முதலீட்டுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் பட்ஜெட்! முத்தரசன் கடும் தாக்கு !

அந்நிய முதலீட்டுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் பட்ஜெட்! முத்தரசன் கடும் தாக்கு !

Update: 2021-02-01 18:39 GMT

சுயசார்பு இந்தியா என்ற முழக்கம் செய்துவிட்டு, அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக பட்டுக்கம்பளம் விரிக்கும் வஞ்சக பட்ஜெட் என்று இந்தியக் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் கோவிட் நோய்த் தொற்று, அதன் பரவலைத் தடுப்பதற்காக பிரதமர் அறிவித்த நாடு முடக்கம், கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் பொருளாதாரத் தேக்கம் போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் என நாட்டின் உற்பத்தித் தொழில்கள் மரணப் படுக்கைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வரலாறு காணாத அளவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதவித்து வருகின்றனர். வேளாண்மைத் துறையில் நீடித்து வந்த நெருக்கடி வெடித்து தொடர் போராட்டங்களாக வெடித்துள்ளன. இதுபோன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மத்திய நிதி நிலையறிக்கை பார்க்க மறுத்து முகத்தைத் திருப்பிக் கொண்டது.

விவசாயத்துறை முன்னேற்றத்திற்காக டீசல் லிட்டருக்கு தலா ரூ4-ம், பெட்ரோல் லிட்டருக்கு தலா ரூ.2.50-ம் செஸ் வசூலிப்பதாக அறிவித்து, விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்டத்தைக் காட்டி, எரிபொருள் நுகர்வோர் மீது சுமை ஏற்றுவது வர்த்தக சூதாட்ட அரசியல் சதி ஆகும். வழக்கம் போல் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் முனைப்பில் தீவிரம் காட்டியுள்ளது மத்தியில் உள்ள பாஜக அரசு. 

சுயசார்பு இந்தியா என்ற முழக்கம் செய்துவிட்டு, அந்நிய முதலீட்டுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் வஞ்சக எண்ணம் கொண்ட பட்ஜெட் என்றும், இது  நாட்டை அந்நிய முதலீட்டிற்கு அடகுவைத்து அடிமைப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News