ஆனந்த யாழை மீட்டி தேசிய விருது பெற்ற கவிஞருக்கு இன்று பிறந்த நாள்..!!

ஆனந்த யாழை மீட்டி தேசிய விருது பெற்ற கவிஞருக்கு இன்று பிறந்த நாள்..!!

Update: 2021-07-12 13:13 GMT

ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களையும், எண்ணற்ற நூல்களையும் எழுதியுள்ள பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 46வது பிறந்த தினம் இன்று. இதனை முன்னிட்டு, தமிழ் சினிமா ரசிகர்கள் அவருடைய பாடல் வரிகளை பதிவிட்டு நினைவுகூர்ந்து வருகின்றனர்.

1975ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர் நா.முத்துக்குமார். 1999ம் ஆண்டு விஜய் நடித்த ‘மின்சார கண்ணா’ படத்தில் இடம்பெற்ற ‘உன் பேர் சொல்ல ஆசைதான்…’ என்ற  பாடலை எழுதி சினிமா உலகில் பிரபலமானார்.

நல்ல நல்ல பாடல் வரிகளை தமிழ் திரையுலகுக்கு கொடையாக கொடுத்த வள்ளல்களில் நா.முத்துக்குமாரும் ஒருவர். ‘காதல் கொண்டேன்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘கில்லி’, ‘காதல்’, ‘சந்திரமுகி’, ‘கஜினி’, ‘புதுப்பேட்டை’,  ‘சிவாஜி’, ‘கல்லூரி’, ‘யாரடி நீ மோகினி’, ‘அயன்’, ‘அங்காடித் தெரு’, ‘பையா’,  ‘மதராசபட்டினம்’, ‘பில்லா-2’, ‘தங்கமீன்கள்’, ‘ராம்’, ‘சைவம்’, ‘2.0’ உள்ளிட்ட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான ‘தங்கமீன்கள்’ படத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்…’ பாடல் அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. அடுத்தபடியாக, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘சைவம்’ படத்திற்காக நா.முத்துக்குமார் எழுதிய ‘எல்லாம் அழகு…’ பாடலுக்காகவும் தேசிய விருது பெற்றார்.

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் 7 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றிய நா.முத்துக்குமார், பாடலாசிரியர் என்பதையும் தாண்டி, அஜித்தின் ‘கிரீடம்’ மற்றும் சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய இரண்டு படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

கிட்டத்தட்ட 1500க்கும் அதிகமான பாடல்களையும், எண்ணற்ற நூல்களையும் எழுதியுள்ள பாடலாசிரியர் நா.முத்துக்குமார், கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். அவருடைய உயிரிழப்பு திரையுலகத்தினர் மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

ஏகப்பட்ட படங்களுக்கு அவர் எழுதிக் கொடுத்த பல ஹிட் பாடல்களுக்கு போதுமான ஊதியம் அவருக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும், அவரது மரணத்தின்போது எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று, பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 46வது பிறந்த தினம். இதனை முன்னிட்டு, தமிழ் சினிமா ரசிகர்கள் அவருடைய பாடல் வரிகளை பதிவிட்டு நினைவுகூர்ந்து வருகின்றனர்.
 

Tags:    

Similar News