இந்த இடத்தில் தக்காளி விற்பனை செய்யக் கூடாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

இந்த இடத்தில் தக்காளி விற்பனை செய்யக் கூடாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

Update: 2021-12-16 11:55 GMT

வடகிழக்கு பருவமழை, வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விலை கடும் உச்சத்தை தொட்டது. இதனால், அன்றாட சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் தக்காளி வாங்க முடியாமல் சாமானியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடும் சிரமம் அடைந்தனர்.

இந்நிலையில், கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளியை ஏற்றி, இறக்க வசதியாக அங்குள்ள திறந்தவெளி இடத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், தந்தை பெரியார் தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் சுவாமிநாதன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தக்காளி லாரிகளை நிறுத்த வசதியாக ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, தக்காளியை ஏற்றி, இறக்க கோயம்பேடு சந்தையில் இடம் ஒதுக்கப்பட்டது. இடம் ஒதுக்கீடு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், மார்க்கெட் கமிட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன், ''தக்காளி லாரிகளுக்காக 94 சென்ட் ஒதுக்கப்பட்டுள்ளது. லாரிகளை நிறுத்தும் இடத்தில் தக்காளி விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும்'' என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டதாவது: வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் வாயிலாக தக்காளி எடுத்து வர சந்தையில் இடம் ஒதுக்கியும் விலை குறையாதது ஏன் என்பதை விளக்க வேண்டும். கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை வர உள்ளதால் லாரிகளை நிறுத்த இடம் ஒதுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து வரத்தை அதிகரித்து தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரியில் இருந்து இறக்கும் இடத்தில் வியாபாரம் செய்யக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News