டெல்லியில் சனி, ஞாயிறுகளில் முழுப் பொதுமுடக்கம்: துணை முதல்வர் திடீர் அறிவிப்பு !!
டெல்லியில் சனி, ஞாயிறுகளில் முழுப் பொதுமுடக்கம்: துணை முதல்வர் திடீர் அறிவிப்பு !!
டெல்லியில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமுடக்கம் அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் மிகவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. அம்மாநில முதலமைச்சரும் கொரோனாவால் பாதித்து தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை எட்டியது. டெல்லியில் கொரோனா பரிசோதனை செய்வோரில் தொற்று உறுதியாகும் விகிதம் கடந்த 24 மணி நேரத்தில் 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனைக்கு பின், துணை முதல்வர் மனீஷ் சிசோடியா வெளியிட்ட அறிவிப்பில், டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவெடுத்துள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர பிற அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்.
பேருந்து நிறுத்தம், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்க பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் அனைத்திலும் இருக்கைகளில் இருந்து மட்டும் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
டெல்லியில் கடந்த 8 முதல் 10 நாள்களில் 11,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் வகை கொரோனாவும் பரவி வருகின்றது. மருத்துவமனையில் 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 124 பேருக்கு ஆக்ஸிஜன் மற்றும் 7 பேர் வெண்டிலேட்டர் உதவியுடனும் இருக்கின்றனர், என்றார்.
டெல்லியில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, உணவகம் உள்ளிட்டவைக்கு கட்டுப்பாடுகள் என மஞ்சள் எச்சரிக்கை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in