இசை விழாவில் சோகம்.. நெரிசலில் சிக்கி 8 பேர் பலி: பலர் காயம்..!
இசை விழாவில் சோகம்.. நெரிசலில் சிக்கி 8 பேர் பலி: பலர் காயம்..!
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த இசை திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர்.
ஹூஸ்டன் நகரில் ராப் பாடகர் டிராவிஸ் ஸ்கவுட் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அப்போது, ரசிகர்கள் திடீரென மேடையை நோக்கி முண்டியடித்துச் சென்றனர். இதில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இசை நிகழ்ச்சி பாதியில் ரத்து செய்யப்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள், 17 க்கும் மேற்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதில், 11 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சி நடந்த மைதானம் அருகே தற்காலிக மருத்துவமனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.