சென்னையில் மழையால் ஏற்பட்ட சோகம்.. அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு
சென்னையில் மழையால் ஏற்பட்ட சோகம்.. அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது. ஆனால், சென்னையில் யாரும் எதிர்பார்க்காத அளவில் கனமழை கொட்டியது.
சென்னையில் நேற்று காலை முதலே நகரின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளிலும் தெருக்களிலும் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, எழும்பூர் பாந்தியன் சாலை, வேப்பேரி ஈவேரா பெரியார் சாலை, எழும்பூர் காந்தி-இர்வின் மேம்பாலம் சாலை, சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் உள்ள சிக்னல் பகுதி, பாரிமுனை , கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை, சேத்துப்பட்டு மேம்பாலம் உள்ளிட்ட பல சாலைகளில் மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக நேற்று ஒரே நாளில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். புளியந்தோப்பில் வடமாநில பெண் ஒருவரும், மயிலாப்பூரில் வீட்டுக்கு வெளியே வந்த சிறுவனும், ஒட்டேரியில் தமிழரசி என்கிற மூதாட்டி ஒருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். மழையால் மின்சாரம் பாய்ந்து ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கனமழையின்போது சென்னையில் நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.
newstm.in