தர்மபுரியில் சோகம்.. இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்.. 3 இளைஞர்கள் பலி..!
தர்மபுரியில் சோகம்.. இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்.. 3 இளைஞர்கள் பலி..!
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளர்கள் திருஞானம் (26), புபேஷ்குப்தா (28), பெருமாள்சாமி (28). இவர்கள் மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடந்த 14-ம் தேதி சந்தைக்கு சென்றுவிட்டு பாளையம்புதூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பாளையம்புதூர் தேசிய நெடுஞ்சாலை கூட்ரோடு வந்தபோது, சென்னையில் இருந்து சேலம் வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டதில், பெருமாள்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த திருஞானம் மற்றும் பூபேஷ் குப்தா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி திருஞானம், பூபேஷ் குப்தா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாக விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் தொப்பூர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.