தேசியக்கொடியை இறக்க முயன்றபோது சோகம்.. மின்சாரம் பாய்ந்து மாணவி பலி..!
தேசியக்கொடியை இறக்க முயன்றபோது சோகம்.. மின்சாரம் பாய்ந்து மாணவி பலி..!
சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டத்தில் பழங்குடியின பள்ளி மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. அந்த விடுதியில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விடுதி வளாகத்தில் மிகப்பெரிய உயரத்தில் இரும்பாலான கொடிக்கம்பத்தில் காலை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
அதன் பின்னர் மாலை தேசியக்கொடியை கம்பத்தில் இருந்து கழற்றி கொண்டுவரும்படி விடுதி காப்பாளர் மாணவிகளான கிரன் திவா மற்றும் காஜல் ஆகியோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, இரு மாணவிகளும் கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை இறக்க முயற்சித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கொடிக்கம்பம் அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது சாய்ந்தது. இதனால், இரும்பாலான கொடிக்கம்பம் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனால், கொடிக்கம்பத்தை பிடித்துக் கொண்டிருந்த இரு மாணவிகள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. மின்சாரம் தாக்கியதில் மாணவி கிரன் திவா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மாணவியான காஜலுக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு வந்த போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த மாணவி காஜலை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவி கிரன் திவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விடுதி காப்பாளர் ஐஸ்வர்யா சாஹுவை பணி இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.