நீரஜ் சோப்ராவுக்கு கவுரவம்.. ஆகஸ்ட் 7 ஈட்டி எறிதல் தினமாக கொண்டாட்டம் !!
நீரஜ் சோப்ராவுக்கு கவுரவம்.. ஆகஸ்ட் 7 ஈட்டி எறிதல் தினமாக கொண்டாட்டம் !!
டோக்கியோ ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பெரும்பாலான நாடுகள் பதக்கங்களை குவித்துவந்தன. இந்திய வெண்கலம், வெள்ளி பதக்கம் பெற்ற நிலையில் தங்கம் பெறவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் இருந்தனர் என்றே கூறலாம்.
ஆனால், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகள போட்டிகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுதான் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
அவர் பதக்கம் வென்றதை இந்தியாவே கொண்டாடியது. 11 ஆயிரம் வீரர்களும், 200 நாடுகளும் கலந்துகொண்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 நான்கு வெண்கல பதக்கங்கள் என 7 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் 48வது இடத்தை பிடித்தது.
இந்த நிலையில், டோக்யோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிப்பதற்காக, ஆகஸ்ட் 7 ஆம் தேதி 'ஈட்டி எறிதல் நாள்' என்று கடைபிடிக்க இந்தியா தடகள சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
இந்திய தடகள சம்மேளத்தின் திட்டக் குழு தலைவர் லலித் பனோட், இந்த விளையாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று இந்தியா முழுவதும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் வரும் காலங்களில் ஒலிம்பிக் தொடர்களில் இந்தியா பதக்கங்களை குவிக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
newstm.in