ஆட்டோ ஓட்டுனரின் வீடு தேடிச் சென்று நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!!
ஆட்டோ ஓட்டுனரின் வீடு தேடிச் சென்று நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!!
திமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக கூட்டணிக்காக பரப்புரை செய்த உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாமக வேட்பாளர் கஸ்ஸாலி போட்டியிட்ட நிலையில் உதயநிதியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உதயநிதிக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கடைசிநாளன்று சேப்பாக்கத்தில் பிரச்சாரம் செய்தார். வாக்குப்பதிவு முடிவடைந்து மே 2ம் தேதி எண்ணப்படும் நிலையில், தனக்காகத் தேர்தல் பணியாற்றிய திமுக நிர்வாகிகளை வீடு வீடாகச் சென்று நேரில் நன்றி தெரிவித்து வருகிறார் உதயநிதி. நிர்வாகிகளின் குடும்பத்தினருடன் உற்சாகமாகப் பேசி புகைப்படம் எடுத்து குடும்பத்தில் ஒருவராக தன்னை ஆக்கிக் கொண்டுள்ளார் என்றே சொல்லலாம்.
திமுக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் தனக்காக ஆட்டோ ஓட்டிய ஓட்டுனரையும் வீடு தேடிச்சென்று சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துள்ளார் உதயநிதி. இந்தப் படம் சமூகத்தளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.
தேர்தல் முடிந்த பிறகு அடுத்த தேர்தல் வரையிலும் கட்சிக்காரர்களை கூடப் பார்க்காத அரசியல்வாதிகளுக்கு மத்தியில், வீட்டிற்கே சென்று நன்றி தெரிவித்து வரும் உதயநிதியின் செயலுக்கு அப்பகுதி மக்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.