பணியாளர்களுக்கு சீருடை மாற்றம்.. எழுந்த கடும் எதிர்ப்பால் பணிந்த ரயில்வே துறை !
பணியாளர்களுக்கு சீருடை மாற்றம்.. எழுந்த கடும் எதிர்ப்பால் பணிந்த ரயில்வே துறை !
இந்திய ரயில்வேயின் ராமாயணம் எக்ஸ்பிரஸ் ரயில் ஊழியர்களின் காவி நிற சீருடை திடீரென மாற்றப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் அடுத்தடுத்து புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் ராமாயண எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்திக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. அயோத்தி செல்லும் வழியில் ராமாயணம் சம்பந்தப்பட்ட ஊர்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
இந்த ரயிலின் ஊழியர்களுக்கு துறவிகள் அணிவது போல காவி நிற சீருடை அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு துறவிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் சீருைட உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. துறவிகள் போல காவி உடை அணிந்து, கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து ஊழியர்கள் உணவு பரிமாறுவது, பயணிகளை வரவேற்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். இந்து துறவிகளுக்கும் இது அவமானம் என்று கூறப்பட்டது. மேலும் இந்த சீருடையை நிறுத்தாவிட்டால் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று உஜ்ஜைனியைச் சேர்ந்த துறவிகள் பலர் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஆர்சிடிசி நிறுவனம் தற்போது சீருடையை மாற்றிவிட்டது. மாறாக ஊழியர்களுக்கு பேன்ட் சட்டை சீருடையை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் தலைப்பாகை மற்றும் மாஸ்க்கில் மட்டும் காவி நிறத்தை இணைத்துள்ளது.
முதலாவது ராமாயண ரயில் நவம்பர் 7ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த ரயில் அயோத்தி, பிரக்யாராஜ், நந்திகிராம், ஜனக்பூர், சித்ரகூட், சீதாமார்ஹி, நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும். இந்த ரயிலில் முதல் வகுப்பு ரெஸ்டாரென்டுகள், நூலகம் உள்ளிட்ட நவீன வசதிகள் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in