“டில்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல; அவர்கள் குண்டர்கள்” என்ற மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் மீனாட்சி லேகி.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது; அந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டில்லியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதுவரை மத்திய அரசு விவசாயிகளிடம் பத்துக்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர் விவசாயிகள்.
இதையடுத்து ஜந்தர் மந்தரில் ‘விவசாயிகள் நாடாளுமன்றம்’ என்ற மாதிரி நாடாளுமன்றத்தை நடத்தி வருகின்றனர். நேற்று தொடங்கியிருக்கும் மாதிரி நாடாளுமன்ற கூட்டம் ஒவ்வொரு நாளும் நடக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த மாதிரி நாடாளுமன்றத்தின் போது பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டில்லியில் போராடிக் கொண்டிருப்பவர்கள் விவசாயிகள் இல்லை; குண்டர்கள், அவர்கள் செய்தவை எல்லாம் குற்றச் செயல்கள்.
மேலும், விவசாயிகளின் போராட்டத்தின் போது ஜனவரி 26ம் தேதி நடந்தது வெட்கக்கேடான குற்றவாளிகளின் நடவடிக்கைகள். எதிர்க்கட்சிகளோ, இதை விமர்சிக்காமல், கண்டிக்காமல் விவசாயிகளின் போராட்டத்தை ஊக்குவிக்கின்றன” என்று ஆவேசமாக கருத்து தெரிவித்தார். மீனாட்சி லேகியின் இந்தப் பேச்சு விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அத்துடன், ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மீனாட்சி லோகி, “நான், விவசாயிகளை குண்டர்கள் என்று சொல்லவில்லை. விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களைத் தான் அப்படி குறிப்பிட்டேன். எனது கருத்து யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன். நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.