உத்தரகண்ட் முதலமைச்சர் நள்ளிரவில் திடீர் ராஜினாமா.. பதவியேற்ற 4 மாதங்களுக்குள் சிக்கல்!
உத்தரகண்ட் முதலமைச்சர் நள்ளிரவில் திடீர் ராஜினாமா.. பதவியேற்ற 4 மாதங்களுக்குள் சிக்கல்!
உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருந்து திரத் சிங் ராவத் நேற்றிரவு ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பாஜக அல்லாத மாநிலங்களில் குழப்பத்தை உண்டாக்கி ஆட்சியை ஏற்படுத்துவதில் பாஜக கில்லாடி. கடந்த சில மாநிலங்களில் நடந்த குழப்பங்களே இதற்கு உதாரணம். ஆனால் அப்படிபட்ட பாஜகவுக்கே தலைவலியாக இருப்பது உத்தரகண்ட் மாநிலம். அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்தின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என பல்வேறு எம்.எல்.ஏக்களும், கட்சியின் உள்ளூர் தலைவர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து பாஜக தலைமை அறிவுறுத்தலையடுத்து திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகினார். பின்னர் கடந்த மார்ச் 10ஆம் தேதி திரத் சிங் ராவத் உத்தரகண்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்ற போது அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏவாக இருக்கவில்லை. எனினும் முதலமைச்சராக பதவியேற்றபின்னர் அவரது செயல்பாடுகள், பேச்சுகள் அனைத்தும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தின.
இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் தனது அமைச்சரவை சகாக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற திரத் சிங் ராவத், ஆளுநர் பேபி ராணி மெளர்யாவை நேரில் சந்தித்து தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை அளித்தார். இதனால் பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சராக பதவி வகித்த போதிலும் திரத் சிங் ராவத், மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யாமல் இருந்து வந்தார்.
அதே நேரத்தில் எம்.எல்.ஏவாக இல்லாத ஒருவர் முதல்வராக தொடர வேண்டுமென்றால் பதவியேற்ற நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வாக வேண்டும். அல்லது மேல்சபையில் எம்.எல்.ஏவாக தேர்வாக வேண்டும்.
உத்தரகண்டில் மேல்சபை என்பது கிடையாது. இந்த சூழலில் செப்டம்பர் 10ஆம் தேதி வரை திரத் சிங்கிற்கு எம்.எல்.ஏவாக அவகாசம் இருந்தது. தற்போது ஹால்த்வானி மற்றும் கங்கோத்ரா ஆகிய தொகுதிகள் மட்டுமே காலியாக இருந்து வரும் நிலையில், உத்தரகண்ட் மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. ஒரு மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஒரு ஆண்டுக்கு அங்கு இடைத்தேர்தல் நடத்த இயலாது என்பது தேர்தல் விதியாகும்.
இதன் காரணமாகவும், முன்னதாக கொரோனா பரவல் காரணமாகவும் உத்தரகண்டில் இடைக்கால தேர்தல் நடத்த முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் கைவிரித்துவிட்டது. இதனையடுத்து அரசியலமைப்பு நெருக்கடியை தவிர்க்கும் வகையில் திரத் சிங் ராவத் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது. புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று மாலை 3 மணியளவில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
newstm.in