சிறையில் இருந்தபடியே பாஜக வேட்பாளரை சுயேட்சையாக தோற்கடித்த வீரன்.. யார் இந்த அகில்?

சிறையில் இருந்தபடியே பாஜக வேட்பாளரை சுயேட்சையாக தோற்கடித்த வீரன்.. யார் இந்த அகில்?

Update: 2021-05-04 08:41 GMT

அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பாளர், ஊழல் எதிர்ப்பு, தகவல் அறியும் உரிமைச்சட்ட போராளியாக அறியப்பட்டிருப்பவர் அகில் கோகோய்(46). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ராய்ஜோர் தள் என்ற புதிய கட்சியின் நிறுவனரான அகில், சிறையில் இருந்தபடியே அசாம் சட்டசபை தேர்தலில் சிப்சாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவர் சிறைத்துறையிடம் முறையிட்டும் ஒருமுறைகூட வெளியில் வந்து பிரசாரம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனினும் சிறையில் இருந்தபடியே பல திறந்த மடல்களை மக்களுக்குக்கு எழுதினார். அதில், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து தீர்க்கமாக பேசினார்.

அதேநேரத்தில், அகில் போட்டியிடும் தொகுதியில் அவரது 85 வயதான தாயார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் அசாமில் உள்ள பிரபல சமூக சேவகர்கள், வெளிமாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் சிப்சாகர் தொகுதியில் அவருக்காக பிரசாரம் மேற்கொண்டனர். ராய்ஜோர் தள் கட்சியின் இளைஞர் படையும் தேர்தல் களத்தில் கடுமையாக உழைத்தது.

அதேநேரத்தில் அத்தொகுதியில் பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றிச் சென்றார். எனினும் சிறையில் இருந்தே அகில் பிரச்சாரத்தை தீவிரப்பபடுத்தினார். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வாக்கு எண்ணிக்கை முடிந்து அகில் கோகோய் 57 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வென்றிருக்கிறார். இதன்மூலம் பா.ஜ.க. வேட்பாளர் சுரபி ராஜ்கோன்வாரியை 11 ஆயிரத்து 875 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம், அசாமில் சிறையில் இருந்தபடி வென்ற முதல் நபர், தேசிய அளவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு பிறகு 2ஆவது நபர் என்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

எனினும் அசாமில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:    

Similar News