விழுப்புரத்தில் பரபரப்பு.. தடுப்பூசி செலுத்திய மாணவி திடீர் மயக்கம்..!

விழுப்புரத்தில் பரபரப்பு.. தடுப்பூசி செலுத்திய மாணவி திடீர் மயக்கம்..!

Update: 2022-01-07 11:33 GMT

தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் பரவல் காரணமாக 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இருப்பதால், அவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 392 பள்ளிகளில் 30,275 தகுதியான மாணவர் - மாணவிகள் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதேபோல், விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களாக மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலையிலும் வழக்கம்போல் மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

அப்போது, தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவி ஒருவர் திடீரென மயக்கமடைந்துள்ளார். இதனால் பள்ளி வளாகம் முழுவதும் பதட்டமான சூழல் உருவானது. உடனடியாக, அங்கிருந்த ஆசிரியை ஒருவர் மாணவியை கைத்தாங்கலாக தூக்கி ஆசுவாசப்படுத்தினார். பின்னர் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

அந்தப் பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட இருந்த நிலையில், மாணவி மயக்கமடைந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News