1000 கோடி திட்டம்... 13 கோடி பேரிடம் நிதி வசூல்! ராமர் கோவில் கட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் தகவல் !
1000 கோடி திட்டம்... 13 கோடி பேரிடம் நிதி வசூல்! ராமர் கோவில் கட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் தகவல் !
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நாடு முழுதும் 5.25 லட்சம் கிராமங்களுக்கு சென்று 13 கோடி பேரிடம் நிதி திரட்டப்படும். குறிப்பாக, தமிழகத்தில் 13 ஆயிரம் கிராமங்களில் 60 லட்சம் பேரை சந்திக்க உள்ளோம் என விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக பொது செயலர் மிலிந்த் ப்ராண்டே தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய கோவிலான கம்போடியா ஹங்கோர்வாட் கோவில் 401 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் 155 ஏக்கரில் அமைந்துள்ளது. மூன்றாவதாக அயோத்தி ராமர் கோவில். கோவிலின் நீளம் 300 அடி, அகலம் 280 அடி, உயரம் 161 அடி. 20 வருடத்திற்கு முன்னதாக வடிவமைக்கப்பட்ட வரைபடத்தில் இருந்து உயரம் மட்டும் 20 அடி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் மொத்தம் 360 தூண்கள் அமைய இருக்கின்றன. பூமி பூஜை செய்யப்படும் இடத்தில் சேர்ப்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள புனிதத் தளங்களில் இருந்து மண் மற்றும் புனித நீர் அனுப்பப்பட்டுள்ளன. கோவிலை கட்டி முடிக்க ரூ.300 கோடி செலவாகும் என்றும், 20 ஏக்கர் பரப்பளவில் தேவையான வசதிகளை உருவாக்க ரூ.1000 கோடி வரையில் செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பொறுப்பை, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா ஏற்றுள்ளது. கோவில் கட்ட, மக்களிடம் நிதி திரட்டி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் கட்டும் பணி தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணிக்கு நன்கொடை சேகரிக்கும் நிகழ்ச்சி மதுரையில், வி.எச்.பி., மாநில அமைப்பாளர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக பொது செயலர் மிலிந்த் ப்ராண்டே பேசுகையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். நாடு முழுதும் 5.25 லட்சம் கிராமங்களுக்கு சென்று நிதி திரட்ட உள்ளோம். 13 கோடி பேரிடம் நிதி திரட்டப்படும். அதன்படி, தமிழகத்தில், 13 ஆயிரம் கிராமங்களில், 60 லட்சம் பேரை சந்திக்க உள்ளோம்.
அயோத்தியில், ராமர் கோவில் பிங்க் கிரானைட்டில் கட்டப்படும். ஆனால், இரும்பு, சிமென்ட் பயன்படுத்தமாட்டோம். அதற்கு மாறாக, பழமையான பாரம்பரியம் மிக்க வகையில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராமர் கோவில் கட்டப்படும். ஆன்மிகத்தையும், தெய்வீகத்தையும் பறைசாற்றும் வகையில் அன்பின் அடையாளமாக ராமர் கோவில் திகழும் என்றார்.