குண்டர்களை வைத்து தொண்டர்கள் விரட்டல்.. அதிமுக குறித்து டிடிவி விமர்சனம்..!
குண்டர்களை வைத்து தொண்டர்கள் விரட்டல்.. அதிமுக குறித்து டிடிவி விமர்சனம்..!
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று (8ம் தேதி) திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; :”அதிமுகவைப் பொறுத்தவரை குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்கிற நிலைதான்.
அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுக்க வந்த தொண்டர்களை குண்டர்களை வைத்து விரட்டியதை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். நான் தூண்டிவிட்டு அவர்களை அங்கு அனுப்பியதாக சிலர் புகார் கூறி இந்தப் பிரச்னையை திசை திருப்பப் பார்க்கிறார்கள். உட்கட்சி கூச்சலை சரி செய்யவே அதிமுகவுக்கு சரியாக உள்ளது. இதில் அவர்கள் எங்கு எதிர்க்கட்சியாக செயல்படுவது..?
உங்களுக்கும் சசிகலா அம்மையாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறதே என்ற கேள்விக்கு, இதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை.
அரசியல் விமர்சகர்கள் அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், சசிகலா ரஜினியை சந்தித்தது குறித்த கேள்விக்கு, சிறையில் இருந்து வந்தபோதே அவரிடம் கூறினேன். அதன் பின்பு தொலைபேசி வாயிலாக ரஜினியின் உடல்நலம் குறித்து சசிகலா விசாரித்தார்.
நேற்று நேரில் சென்று சந்தித்து விசாரித்து வந்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் எங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தமிழ்நாடு முதல்வர் வந்த உடனே நீட் தேர்வு ரத்து என்பதை ஒரே கையெழுத்தில் முடித்து விடுவேன் என்று கூறினார். அதேபோல் சிறுபான்மையின மக்களின் காவலர்கள் என்று கூறிக்கொண்டு திமுக 7 பேர் விடுதலையில் என்ன பேசினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
திமுகவின் சுயரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அவர்களை வேறு யாரும் இயக்குகிறார்களா? என்ற கேள்விக்கு, “காலம் அதை உங்களுக்கு விளக்கும். எங்களுடைய இலக்கே அம்மாவுடைய கட்சியை மீட்டெடுப்பதுதான்” என தெரிவித்தார்.