காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்கவேண்டிய தண்ணீர் திறக்க கர்நடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம் டெல்லி மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்டார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பிற மாநில பிரநிதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்தது. 

மேலும் கர்நாடக அரசு வழங்க வேண்டிய 30.6 டி.எம்.சி., நீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கு தர வேண்டிய 30.6 டி.எம்.சி., நிலுவையை உடனே திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரையும் காவிரியில் உடனே திறக்கவும் ஆணையம் உத்தரவிட்டது.

newstm.in

Tags: