இந்தியாவில் ஒமைக்ரான் தீவிரம் எப்படி இருக்கும்? - முதன்முதலில் உலகுக்கு எச்சரித்த நிபுணர் கணிப்பு !

இந்தியாவில் ஒமைக்ரான் தீவிரம் எப்படி இருக்கும்? - முதன்முதலில் உலகுக்கு எச்சரித்த நிபுணர் கணிப்பு !

Update: 2021-12-26 12:55 GMT

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாகப் பரவினாலும் அதன் தீவிரம் குறைவாகவே இருக்கும் என்று தென்னாப்பிரிக்க நிபுணா் ஏஞ்சலீக் கூட்ஸீ தெரிவித்துள்ளாா்.

தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாகப் பரவியதை முதன்முதலாக கண்டுபிடித்து உறுதிப்படுத்தியவர் தென்னாப்பிரிக்க மருத்துவக் குழுத் தலைவரான ஏஞ்சலீக் கூட்ஸீ. இவரது எச்சரிக்கையை தொடர்ந்தே உலக நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குத் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியளித்த மருத்துவர் ஏஞ்சலீக் கூட்ஸீ கூறுகையில், இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாகப் பரவும். கொரோனா பரிசோதனை- பாதிப்பு விகிதமும் அதிகமாக இருக்கும். ஆனால், தென்னாப்பிரிக்காவில் காணப்படுவதைப் போல ஒமைக்ரான் பரவலின் தீவிரம் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.

மக்களுக்குத் தற்போது செலுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகள் ஒமைக்ரான் தொற்று பரவலை வெகுவாகக் குறைக்கும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட 100 சதவீத வாய்ப்புள்ளது. அவா்கள் மூலமாக மற்றவா்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

கொரோனா மற்ற உருமாற்றங்களுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் வகை சற்று வலிமை குறைந்ததாகவே உள்ளது. கொரோனா தொற்று பரவல் தற்போதைய சூழலில் முடிவுக்கு வராது. எதிா்காலத்தில் உலகின் குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டுமே பரவும் நோயாக கொரோனா தொற்று மாறும். தற்போதைய நிலையில் சிறாா்களும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகின்றனா். ஆனால், 5 முதல் 6 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் குணமடைகின்றனா்.

ஒமைக்ரான் வகை தீநுண்மி மேலும் உருமாற்றம் பெற்று வலுவடையவோ அல்லது வலுவிழக்கவோ வாய்ப்புள்ளது. கொரோனா தடுப்பூசி மட்டுமே தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வராது. முகக் கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, காற்றோட்டமான இடங்களில் இருப்பது உள்ளிட்ட மக்கள் கடைப்பிடிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன, என்றார்.


 

newstm.in

Tags:    

Similar News