உள்ளாட்சித் தேர்தல் எப்போது..?; ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்..!
உள்ளாட்சித் தேர்தல் எப்போது..?; ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்..!;
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.