வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் எப்போது? விவசாயிகளுக்கு நல்ல செய்தி சொன்ன மத்திய அரசு !
வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் எப்போது? விவசாயிகளுக்கு நல்ல செய்தி சொன்ன மத்திய அரசு !
மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்தது. இந்த சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு கூறியது. எனினும் இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை என பெரும் எதிர்ப்பு எழுந்தது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு ஓராண்டு காலமாக போராடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான அரசியல் சாசன செயல்முறை செய்து முடிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலைமையை மேம்படுத்துவதற்காக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தும், அதன் முக்கியத்துவத்தை சில விவசாயிகளுக்கு விளக்குவதற்கு தங்களால் முடியாமல் போய்விட்டதாகவும், அதனால் திரும்பப்பெறுவதாகவும் கூறினார். போராடும் விவசாயிகள் உடனடியாக வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான நடைமுறைகள் நடந்து முடியும் வரையில் போராட்டம் தொடரும் என போராடும் விவசாயிகள் அறிவித்தனர். அத்துடன் போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நாடாளுமன்றம் நோக்கி 29ஆம் தேதி பேரணி நடத்தவும் முடிவு செய்து அறிவித்தனர்.
இந்த நிலையில், மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கடந்த 24 ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த மசோதா வரும் 29ஆம் தேதி தொடங்குகிற நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தாக்கலாகிறது. அதாவது, குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
newstm.in