நீட் தேர்வை கொண்டு வந்தது யார்..? கேட்கிறார் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வை கொண்டு வந்தது யார்..? கேட்கிறார் மா.சுப்பிரமணியன்

Update: 2021-06-18 15:18 GMT

“பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்திக்கும்போது நீட் தேர்வை ரத்து செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும்” என, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது தான் நீட்தேர்வு நடத்தப்பட்ட நிலையில் ஓபிஎஸ் இவ்வாறு தெரிவித்திருப்பது விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதல்வரும் பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார். பாதிப்பை கண்டறிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.



அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது. நீட் தேர்வுக்கான பயிற்சியும் அதிமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. நீட் தேர்வு இப்போதுதான் வந்ததுபோல ஓபிஎஸ் பேசுகிறார்.

நீட் தேர்வை முதன்முதலில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியபோது ஆட்சியில் இருந்த கருணாநிதி நீதிமன்றம் சென்று அதற்கான தடையாணையை பெற்றார். அதே போல, முதல்வர் ஸ்டாலினும் நடவடிக்கை எடுப்பார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என நம்பிக்கை உள்ளது.

நீட் தேர்வை கொண்டு வந்தது யார்..? மாணவ சமூகத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது யார்..? என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது, ஓபிஎஸ் ஏன் அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டார் என்று தெரியவில்லை” எனக் கூறினார்.

Tags:    

Similar News