தடுப்பூசிகள் வீணானது ஏன்..? : எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!
தடுப்பூசிகள் வீணானது ஏன்..? : எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!;
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜலகண்டாபுரத்தில் தூய்மைப் பணியாளர்கள் உட்பட முன்களப் பணியாளர்கள் 100 பேருக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நிவாரண உதவியாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “நீட்தேர்வு ரத்து விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியது போல் கொரோனா தடுப்பூசிகள் வேண்டுமென்றே வீணடிக்க படவில்லை.
ஆரம்ப காலகட்டத்தில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மருந்துகள் வீணாகின. கொரோனா மூன்றாம் அலை பரவும் சூழலில் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து தமிழக அரசு பெற வேண்டும்.
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஏற்கெனவே பலமுறை கூறியுள்ள நிலையில் அவர் வேண்டுமென்றே பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். எம்ஜிஆருக்கு அரசியல் ஆலோசனை வழங்கியதாக கூறிய சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை அழித்துவிட முடியாது. சசிகலா அதிமுகவிலிருந்த காலத்திலும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது.
மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறி விடும். நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில், கர்நாடகா இனி காவிரியின் குறுக்கே அணைகள் தடுப்பணைகள் கட்டக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.