காயத்ரி மந்திரம் கொரோனாவை கட்டுப்படுத்துமா? நிதி ஒதுக்கிய மத்திய அரசு- மீண்டும் அதிருப்தி !!
காயத்ரி மந்திரம் கொரோனாவை கட்டுப்படுத்துமா? நிதி ஒதுக்கிய மத்திய அரசு- மீண்டும் அதிருப்தி !!
காயத்ரி மந்திரம் உச்சரித்தால் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து மீண்டு வரமுடியுமா என்பது தொடர்பான ஆய்வுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கிடு செய்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு தற்போது எடுக்கப்படும் நடவடிக்கை நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அதாவது அங்கு சாதாரண அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றனர். அதில் ஒரு பிரிவினருக்கு சிகிச்சையும், மற்றொரு பிரிவினருக்கு காயத்ரி மந்திரங்களை உச்சரிக்க வைப்பது, யோகா பயிற்சி அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் காயத்ரி மந்திரங்கள் உச்சரிப்பது, உடலில் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கச் செய்கிறதா? கொரோனா நோயாளிகளை விரைவாக குணப்படுத்துகிறதா? அவர்களின் உடல்நிலை மீண்டும் பழைய எதிர்ப்பு சக்தியுடன் பெறுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்கான நிதியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
எனினும் இந்த ஆய்வு தொடங்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இதற்கு அனுமதி கோரி ஐசிஎம்ஆர் அமைப்பிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐசிஎம்ஆர் அனுமதி கிடைத்ததும் ஆய்வு தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் கடுமையாக போராடி வரும் நிலையில், இந்தியா 2ஆவது அலை மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் முதல் அலையின் போது பிரதமர் மோடி விளக்கு ஏற்ற கூறியது, மணி அடித்து சத்தம் எழுப்ப கூறியது போன்ற நடவடிக்கைகள் சர்வதேச அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில் தற்போது காயத்ரி மந்திரம் உச்சரிப்பது குறித்து ஆய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது பல்வேறு தரப்பினரையும் அதிருப்தி அடையச்செய்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை விட்டுவிட்டு கொரோனா பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதில் கவனம் செலுத்தவும் பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
newstm.in