இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா.. இன்று கடைசி ஒரு நாள் போட்டி: !!

இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா.. இன்று கடைசி ஒரு நாள் போட்டி: !!

Update: 2022-01-23 08:15 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இன்று நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் இந்த பயணம் நிறைவுக்கு வருகிறது. 

கடந்த மாதம் அங்கு சென்ற இந்திய அணி ‘தென்ஆப்பிரிக்காவின் கோட்டை’ என்று வர்ணிக்கப்பட்ட செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. ஆனால் அடுத்த இரண்டு டெஸ்டிலும் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. 
இதனையடுத்து இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்ெகட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்திய அணி வீரர்கள் பதில் அடி கொடுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அனைவரின் கண்ணும் இந்திய அணி மீது பட்டதுபோல், முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியா அணி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியாவின் மிடில்வரிசை பேட்டிங் சொதப்பலே தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது. 

முதல் ஆட்டத்தில் 297 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா ஆடிய போது அரைசதம் அடித்த ஷிகர் தவான், விராட் கோலி ஆட்டமிழந்ததும் ஆட்டத்தின் போக்கு தடம்புரண்டது. 2ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த போது ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 179 ரன்களுடன் இந்தியா வலுவான நிலையில் இருந்தது. ஆனால் லோகேஷ் ராகுல் (55 ரன்), ரிஷாப் பண்ட் (85 ரன்) அடுத்தடுத்து வெளியேறியதும் 330 ரன்களை தாண்டும் போல் சென்ற ஸ்கோர் 287 ரன்னில் அடங்கிப்போனது. இந்த இலக்கை தென்ஆப்பிரிக்கா 11 பந்துகள் மீதம் வைத்து எளிதில் எட்டியதோடு தொடரையும் கைப்பற்றி விட்டது.

இந்திய பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே கட்டுக்கோப்புடன் வீசுகிறார். புவனேஷ்வர்குமார், அஸ்வினின் பவுலிங் எதிர்பார்த்தபடி இல்லை. இதனால் இன்றைய ஆட்டத்திற்கு தீபக் சாஹர், முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர் இரு ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெற வாய்ப்புள்ளது.

முதல் இரு ஆட்டங்கள் நடந்த பார்ல் ஆடுகளம் மெதுவானதன்மை கொண்டதாக இருந்தது. ஆனால் இந்த போட்டி நடக்கும் கேப்டவுன் ஓரளவு வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது என்பதால் வேகப்பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும். கடந்த இரு போட்டிகளிலும் இரு ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் இப்போட்டியில் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க வாய்ப்புள்ளது.

 தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை இரு ஆட்டங்களிலும் திட்டமிட்டு கச்சிதமாக விளையாடினர். சுழற்பந்து வீச்சில் பவீனமானவர்கள் என்பதை மாற்றிக்காட்டி சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். கேப்டன் பவுமா, குயின்டான் டி காக், வான்டெர் துஸ்சென், ஜேன்மன் மலான், மார்க்ரம் ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர்.  

இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா இங்கு 37 ஆட்டங்களில் விளையாடி 31 வெற்றிகளை குவித்து இருக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

newstm.in

Tags:    

Similar News