நடுரோட்டில் பெண் வெட்டிக் கொலை.. 2-வது கணவருக்கு போலீஸ் வலை..!

நடுரோட்டில் பெண் வெட்டிக் கொலை.. 2-வது கணவருக்கு போலீஸ் வலை..!

Update: 2021-12-30 04:25 GMT

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஜிகனியை சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி (40). இவருக்கு திருமணம் முடிந்து கணவர், ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அர்ச்சனா ரெட்டி தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.


இந்த நிலையில், அர்ச்சனா ரெட்டிக்கும், நவீன் குமார் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

அர்ச்சனா ரெட்டிக்கு ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணாவில் ஏராளமான சொத்துக்கள் உள்ளது. அந்த சொத்துகளில் பாதியை தனக்கு பிரித்து தர வேண்டும் என்று அர்ச்சனா ரெட்டியிடம், நவீன்குமார் கேட்டதாக தெரிகிறது. 

இதற்கு அர்ச்சனா ரெட்டி மறுத்து விட்டார். இதுதொடர்பாக நவீன் குமாருக்கும், அர்ச்சனா ரெட்டிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அர்ச்சனா ரெட்டி நவீன்குமார் பிரிந்தார். பின்னர் தனது மகனுடன் பெல்லந்தூரில் வசித்து வந்தார். ஆனாலும் சொத்து விஷயத்தில் அர்ச்சனா ரெட்டியிடம், நவீன்குமார் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜிகனியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க அர்ச்சனா ரெட்டி காரில் பெல்லந்தூரில் இருந்த ஜிகனிக்கு சென்றார். தேர்தலில் வாக்களித்துவிட்டு பெல்லந்தூருக்கு சென்றார்.

காரை டிரைவர் பிரமோத் ஓட்டினார். காரில் அர்ச்சனா ரெட்டியின் மகனும் இருந்தார். எலெக்ட்ரானிக் சிட்டி அருகே ஒசரோடு ஜங்ஷன் பகுதியில் வந்த போது காரை வழிமறித்த நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அர்ச்சனா ரெட்டியை காரில் இருந்து வெளியே பிடித்து இழுத்தனர்.

பின்னர் நடுரோட்டில் அர்ச்சனா ரெட்டிைய தள்ளிவிட்டு நவீன் குமார், அவரது நண்பரும் வாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த அர்ச்சனா ரெட்டி பரிதாபமாக இறந்தார். பின்னர் நவீன் குமார், அவரது நண்பர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அர்ச்சனா ரெட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறில் அர்ச்சனா ரெட்டியை நவீன் குமார், அவரது நண்பர் சேர்ந்து வாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவான நவீன் குமார், அவரது நண்பர்கள் 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Similar News